இணைய தளம் உருவாக்கப் போகிறீர்களா?

இணைய தளம் உருவாக்கப் போகிறீர்களா? இணைய தளம் குறித்த விழிப்புணர்வு உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். அதன் தன்மைகளையும், ஆற்றலையும் நீங்கள் உணராமல் இருக்கலாம். உங்களுக்காகவே இந்த பகுதி. இதில் நாம் காண இருக்கும் பகுதிகள்:

  • இணையம் எதற்கு?
  • தொழில் புரிபவர்களுக்கான இணைய தளம்
  • என்ன முடியும்?
1. இணையம் எதற்கு?
நீங்கள் யார்? தொழில் அதிபரா? பணியாளரா? வியாபாரியா? உழைப்பாளியா? ஆசிரியரா? விரிவுரையாளரா? மாணவரா? அலுவலரா? தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்றான் பாரதி. தேமதுரத் தமிழோசையை மட்டுமல்ல, நீங்கள் விரும்பும் எந்த ஒன்றையும் உலகெலாம் பரவும் வகையில் செய்யும் பணியை இணையம் இன்றளவும் செவ்வனே செய்து வருகிறது. உங்களின் கருத்துக்களை நீங்கள் எப்படி இந்த உலகிற்கு அறிவிக்கப் போகிறீர்கள்?

2. தொழில் புரிபவர்களுக்கான இணைய தளம்:
எந்த ஒரு தொழிலுக்கும் விளம்பரம் மிக முக்கியம். நீங்கள் இன்ன தொழில் செய்கிறீர்கள் என்பதை உலகம் அறியும் போது தான், உங்களுக்கான அவசியத்தை உலகம் உணரும். உங்கள் தொழிலும் வளரும். வியாபாரம் சிறக்கும். வருமானம் பெருகும். விளம்பரத்தையும், உங்கள் தொழிலில் உங்களின் சிறப்பம்சத்தையும் குறைந்த முதலீட்டில் உலகிற்கு அறிவிக்கும் சக்தி வாய்ந்த சாதனமாக இணையத்தை கொள்ளலாம்.

3. என்ன முடியும்?
  • தொழிலைப் பற்றின விபரங்களை எழுதலாம்.
  • உங்களின் சிறப்பம்சங்களை விவரிக்கலாம்.
  • தொழில் சார்ந்த புகைப்படங்களை பிரசுரிக்கலாம்.
  • வீடியோ க்ளிப்புகளை இணைக்கலாம்.
  • ஈ -மெயில் தகவல் பரிமாற்ற வசதி
  • தொழில் சார்ந்த கணக்கு வழக்குகளை கையாளலாம்.
  • இணையத்தில் இருந்த படியே, உலகின் எந்த மூலையிலிருந்தும், தொழில் நடவடிக்கைகளை கண்காணிக்கலாம்.
இப்படியாக இன்னும் பற்பல.

இணையப் பயன்பாடு:

இந்தப் பகுதியில் 'இணைய தளங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?', 'அதன் கூறுகள் யாவை?', 'இணையத்தை எவ்வாறு திறன் மிகுந்த ஆயுதமாக பயன்படுத்தலாம்?' உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியில் நாம் காண இருக்கும் தலைப்புகள்:

  • இணைய தளங்கள் வடிவமைக்கப் பயன்படும் மென்பொருட்கள்
  • இணைய தள வகைகள்
  • இணைய மேலாண்மை
 1.இணைய தளங்கள் வடிவமைக்கப் பயன்படும் மென்பொருட்கள்
இணைய தள வடிவமைப்பில் பல்வேறு மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. எச். டி. எம். எல். முதல் ஏ. எஸ். பி. டாட் நெட் வரை பல்வேறு இணைய மென்பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. இணைய தால டொமைன் பெறுதல், வடிவமைத்தல், தகவல்களை கையாளுதல், இணைய தள அனிமேஷன் வேலைகள், வீடியோ மேலாண்மை என்று ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. போட்டோ ஷாப், கோரல் டிரா, எச். டி. எம். எல்., சி.எஸ்.எஸ்., பி.எச்.பி. , ஜாவா ஸ்கிரிப்ட், எக்ஸ்.எம்.எல்., எக்ஸ்.எஸ்.எல்.டி., ஏ.எஸ்.பி. டாட் நெட், பிளாஷ் என்று இன்னும் பற்பல அவற்றுள் அடங்கும். அது மட்டுமல்ல, இணைய தளத்தை பார்வையிட பல்வேறு ப்ரோவ்செர்கள் பயன்பாட்டில் உள்ளன. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மொசில்லா பயர் பாக்ஸ், ஒபேரா, கூகிள் குரோம் இன்னும் பற்பல ப்ரோவ்செர்களும் பயன்பாட்டில் உள்ளன. அது மட்டுமா? இணைய தளத்தின் பயன்பாட்டை எளிதாக்கவும், சிறப்பாக்கவும் பற்பல சிறப்புக் கருவிகள் (Add-On) பயன்படுகின்றன. குறிப்பாக அடோப் ஷாக்வேவ் பிளேயர், மைக்ரோசாப்ட் சில்வர்லைட் இன்னும் பற்பல கருவிகளும் அடங்கும். இவைகள் எள்ளவும் ப்ரோவ்செர்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு அந்தந்த ப்ரோவ்செர்களுடன் உபயோகிக்கப்படுகின்றன.

2.இணைய தள வகைகள்:

இணைய தளங்களை நமது பயன்பாட்டின் அடிப்படையில் ௫ விதங்களாகப் பிரிக்கலாம்.
  • சாதாரண தளங்கள்
  • காட்சித் தளங்கள்
  • அனிமேசன் தளங்கள்
  • தகவல் தளங்கள்
  • வீடியோ தளங்கள்
இன்னும் பற்பல விதங்களில் வகைப்படுத்தலாம் என்றாலும், மேற்கண்ட வகைகள் குறிப்பிடத்தக்கன. எனவே, அவற்றை பற்றி நாம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா? அதற்க்கு முன்னதாக, இணைய மேலாண்மை குறித்து சற்றே கண்டோம் என்றால், அது உங்களுக்கு இணையம் குறித்த விழிப்புணர்வை இன்னும் அதிகமாக ஏற்படுத்துவதாக அமையும்.

3.இணைய மேலாண்மை:
இணைய மேலாண்மை என்பது இணையத்தை எவ்விதம் சக்தி வாய்ந்த ஆயுதமாக பயன்படுத்துவது என்பது பற்றினது. இணையத்தின் முக்கிய கூறுகளாக கீழ் வருவனவற்றை கூறலாம்.
  • சேர்ச் இன்ஜின்
  • ஈ-மெயில்
  • மெசஞ்சர்
  • டவுன்லோடர்
  • அவுட் லுக் மென்பொருள்
சேர்ச் இன்ஜின் பொதுவாக நமக்குத தேவையான தகவல்களை தேடுவதற்குப் பயன்படுகிறது. இணையத்தில் பல்வேறு சேர்ச் இன்ஜின்கள் இருக்கின்றன. இவைகளில் கூகிள் சேர்ச் இன்ஜின் நமக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் தருவதில் முதலிடம் பிடிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் மைக்ரோசப்ட் நிறுவனம் தன் bing தளத்தை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. இரண்டும் தேடுதல் பணிகளில் சிறந்து விளங்கும் தளங்கள் என்றாலும் யாஹூ சர்ச் இன்ஜினும் இங்கே குறிப்பிடத்தக்க ஒன்று. Ask, cuil ஆகியன மேலயும் சில.

ஈ-மெயில் தளங்கள் நிறையவே உள்ளன. பொதுவாக gmail, yahoo, hotmail உள்ளிட்ட தளங்கள் ஈ-மெயில் சேவையை இலவசமாகவும், சிறப்பாகவும் செய்து வருகின்றன. ஈ-மெயில் வர்த்தகப் பெருமக்களுக்கு தகவல் பரிமாற்றத்தில் பெரிதும் உதவும் சாதனமாக விளங்குகின்றது. ஈ-மெயில் சேவையை பெற்றுவிட்டாலே அவுட் லுக் மற்றும் மெசஞ்சர் சேவையை பெறுவது மிகவும் எளிதாகிவிடுகிறது.

மெசஞ்சர் தற்கால விரைவான மற்றும் கட்டணமற்ற தகவல் பரிமாற்றத்திற்கு பெரிதும் உதவும் மென்பொருள். yahoo messenger, gtalk, skype உள்ளிட்ட பல மென்பொருட்களும் மசன்ஜர் சேவையைத் திறம்படத் தருகின்றன. இவற்றை இணையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இவற்றைக் கொண்டு தகவல்களைப் பரிமாறிக்கொள்ளலாம். படங்களை அனுப்பலாம். வெப் கேமரா மூலமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே உரையாடலாம். இந்த முறையில் கலந்துரையாடலும் சாத்தியம். ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் உள்ளவர்களுடன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒரு சாதாரண மனிதன் கலந்துரையாடிவிட முடியும். இதற்கு எல்லையோ, வரையரையோ, கட்டணமோ எதுவும் கிடையாது.

டவுன்லோடர் மென்பொருட்கள் இணையம் வழியாக தகவல்களை பதிவிறக்கும் பணியைச் செய்கின்றன. பல்வேறு இணையத் தளங்களிலிருந்து படங்கள், பாடல்கள், வீடியோ க்ளிப்புகளை நாம் டவுன்லோட் செய்யும் பொழுது பதிவிறக்கும் தளங்கள் மூடப்பட்டாலும் பதிவிறக்கும் செயல் எந்த விதத்திலும் தடைபடாவண்ணம் டவுன்லோடர் பதிவிறக்கும் தகவல்களை கொடுக்கப்பட்ட வரிசைக்கிணங்க முறைப்படுத்தும் பணியைச் செய்கின்றன. ஆர்பிட் டவுன்லோடர், யு ட்யுப் டவுன்லோட் மேனேஜர், பாயர் பாக்ஸ் டவுன்லோட் மேனேஜர் உள்ளிட்ட மென்பொருட்கள் இதற்கு தக்க உதாரணகள். மேற்கண்ட அனைத்து மென்பொருட்களும் இணையத்தில் எல்லாதரப்பட்டவர்களுக்கும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.

அவுட்லுக் மென்பொருட்கள் பொதுவாக நமக்கு வரும் ஈ-மெயில்களை நிர்வகிக்க உதவுகின்றன. சந்தையில் ஏராளமான அவுட்லுக் மென்பொருட்கள் கிடைக்கின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக் எக்ஸ்ப்ரெஸ் இதற்க்கு நல்லதொரு உதாரணம். நமக்கு வரும் ஈ-மெயில்களைத் தரம் பிரிக்க, தக்க சமயத்தில் நமக்கு நினைவுபடுத்த, குறிப்பிட்ட மெயில்களுக்கு தானாகவே பதிலனுப்ப, வேண்டதவரிடமிருந்து வரும் ஈ-மெயில்களைத் தரம் பிரித்து அழிக்க என்று இதன் பயன்பாடு எண்ணிலடங்காதது.

சரி வாசகர்களே! இது வரை இணையம் குறித்த விழிப்புணர்வுக்கான தகவல்களைத் தெரிந்துகொண்டோம் அல்லவா? இவற்றை எல்லாம் பயன்படுத்தி உங்களின் தகவல் பரிமாற்றத்தை சக்திவாய்ந்ததாக மாற்றிக்கொள்ளுங்கள். இணையத்தின் வகைகளைப் பற்றி அடுத்த கட்டுரையில் இன்னும் காரசாரமாக விவாதிக்கலாம்.